பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை மாலை முதல் 15 ஆம் தேதி காலை வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை உள்ளது. ஒவ்வொரு வருடமும் அந்த கோட்டையினுள்ள வீரசாக்கதேவி ஆலயத்தில் திருவிழா நடைபெறும்.
144 தடை உத்தரவு
இந்நிலையில், இந்த வருடம் நடைபெற இருக்கிற திருவிழாவில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் மற்றும் அமைதியாக முறையில் திருவிழா நடத்திட 12ம் தேதி மாலை முதல் 15ம் தேதி காலை வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியில் நடைமுறை சட்டம், பிரிவு 144 – ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவுரைகள்
இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை. தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திருவிழாவிற்கு வரும் மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை. பிற மாவட்டத்தில் இருந்து வரும் மக்கள் வாடகை வாகனம் மூலமாக வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவிலிருந்து சில விலக்குகள்
இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி நாட்களில் வேறேதேனும் கூட்டங்கள், அன்னதானம்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அனுமதி பெற்று இருக்க வேண்டும். மேலும், இத்தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலதிற்கு பொருந்தாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை வெளிட்டுள்ளார்.
இக்கோட்டை அருகே மற்றொரு சமூகத்துக்கு சொந்தமான கோட்டை கருப்பசாமி கோவில் இருக்கிறது. இது தொடர்பாக இரு சமூகத்திற்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.