ஆன்மீகம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை !

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை போற்றப்படுகிறது. அதாவது சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைகாவல் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்க திருவண்ணாமலை அக்னியின் ஸ்தலமாக விளங்குகிறது.

திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும். எனவே சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவண்ணாமலையில், வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் 4 லட்சத்துக்கும் குறையாத மக்கள் கூட்டத்தை காணலாம்.

புராணம் கூறுவது என்ன?

விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று நிரூபிக்க வராக அவதாரம் எடுத்து விஷ்ணு பூமியை குடைந்து சிவனின் அடியை தேட, பிரம்மதேவர் சிவனின் முடியை நோக்கி அன்னப் பறவையில் பறக்கிறார். ஆனால் விஷ்ணுவும், பிரம்மனும் தங்கள் முயற்ச்சியில் தோல்வியடைய சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை என்று புராணம் சொல்கிறது.

திருவண்ணாமலையின் அருணாச்சலேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில். இந்த சிவன் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கமாகவும், புண்ணியமாகவும் கருதப்படுகிறது. எனவே பௌர்ணமி அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் இங்கு கிரிவலம் வருகின்றனர். அதாவது கிரி என்றால் மலை என்ற பொருள். ஆகையால் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ தூரம் நடக்கவேண்டும்.

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஷ்டலிங்கம் எனப்படும் 8 லிங்கங்கள் அமைந்துள்ளன. இவை ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளன. அதோடு ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த அஷ்ட லிங்கங்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்ற பெயர்களில் அறியப்படுகின்றன. இவ்வெட்டு லிங்கங்களும் கிரிவலம் வரும் பாதையில் அமைந்திருப்பதோடு, இவற்றை தரிசனம் செய்வதால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கிரிவலம்

1. இந்திரலிங்கம் : கிரிவலம் செல்லும் வழியில் முதன்முதலில் நாம் தரிசிக்க போவது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கு திசையை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தேவர்களின் தலைவன் இந்திரதேவனால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த லிங்கம் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கமாதலால் இதை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், குறையில்லா செல்வமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

2. அக்னிலிங்கம் : கிரிவலம் செல்லும்போது 2-வதாக தோன்றும் அக்னிலிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே தென்கிழக்கு திசையை நோக்கி அமையப்பெற்றுள்ளது. இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறமாக உள்ள ஒரே லிங்கம் என்ற சிறப்பை பெறுகிறது. இந்த அக்னிலிங்கத்தை வழிபடும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. மேலும் இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை அகற்றும் சக்தி இதற்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

3. யமலிங்கம் : கிரிவலத்தில் 3-வது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியவாறு யமதர்மனால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. அதோடு செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட இந்த லிங்கத்தின் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை தரிசனம் செய்பவர்கள் பண நெருக்கடி ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று நம்பப்படுகிறது.

4. நிருதி லிங்கம் : கிரிவலப் பாதையில் 4-வதாக உள்ள லிங்கம் தென்கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் நிருதி லிங்கம் ஆகும். இது பூதங்களின் ராஜாவால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. ராகுவின் பார்வையில் உள்ள இந்த லிங்கம் சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் அருகே அமையப்பெற்றுள்ளது. இதை வணங்கும் பக்தர்களின் வாழ்வில் பிரச்சனைகள் குறையும் என நம்பப்படுகிறது.

5. வருண லிங்கம் : கிரிவலப் பாதையில் 5-வதாக உள்ள லிங்கம் வருண லிங்கம் ஆகும். இந்த லிங்கம் மேற்கு திசையை பார்த்தவாறு மழைக்கடவுள் வருணதேவனால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் அமையப்பெற்றுள்ளது. மேலும் சனி பகவானின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் நோய் நொடியின்றி வாழலாம் என்று நம்பப்படுகிறது.

6. வாயுலிங்கம் : கிரிவலம் செல்லும் போது 6-தாக தென்படும் வாயு லிங்கம் வடமேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இது வாயு பகவானால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை ஆட்சி செய்யும் கிரகம் கேதுவாகும். இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் இதய நோய், வயிறு சம்மந்தமான நோய்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் இன்ப வாழ்வு வாழலாம் என்று நம்பப்படுகிறது.

7. குபேர லிங்கம் : கிரிவலத்தில் உள்ள 7-வது லிங்கம் குபேர லிங்கம் வடதிசையை நோக்கி அமையப்பெற்றுள்ளது. இது செல்வக் கடவுள் குபேர கடவுளால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுவதுடன், குருவை ஆட்சி கிரகமாக இந்த லிங்கம் கொண்டுள்ளது. எனவே இதை வணங்கும் பக்தர்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது.

8. ஈசானிய லிங்கம் : கிரிவலத்தின் கடைசி லிங்கமான ஈசானிய லிங்கம் வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டதாக புராணம் கூறுகிறது. மேலும் புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இதை வணங்குபவர்கள் அமைதியான வாழ்வை மேற்கொள்வதுடன், எடுத்த காரியத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் வெற்றி வீரர்களாகவும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை தரிசிக்க நீங்கள் தயாரா?

Related posts