ஆன்மீகம்

பஞ்சபூத தலங்களில் நீர் தலம் – திருவானைக்காவல் திருக்கோவில்

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது.

இத்தலத்தின் திருச்சுற்று மதில் எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே திருநீற்றை கூலியாகக் கொடுத்தார். அவ்வாறு வழங்கப்பட்ட திருநீறு தங்கமாக மாறியதாம். இதனால், இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

இக்கோவில் மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம்  தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருக்கும். கோடைக் காலத்திலும் , காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தல வரலாறு :

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் இருந்தனர் . இவர்களுக்குள் தங்களில் யார் அதிகமாக சிவசேவை புரிகிறார்கள் என்பதில் போட்டி வந்தது .

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையானது. ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக்கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர்.

இதிலும், இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. சிவலிங்கம் கூரையில்லாமல் கிடந்தது. சிலந்தி ,லிங்கத்தின் மேல் வலை பின்னி கூரையமைத்து பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.  யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புகுந்தது. யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார். சிலந்தி, மறு பிறவியில் கோச்செங்கட்சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. கோச்செங்கட்சோழன்,  70  சிவன் கோவில்கள் கட்டினான்.

இப்படி கட்டப்பட்ட கோவில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

நவ துளை ஜன்னல்

மூலஸ்தானம் எதிரில் ஒன்பது துளைகள் கொண்ட ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இதன் வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனித உடலிலுள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கிறது . அவற்றை அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை இந்த ஜன்னல் எடுத்துணர்த்துகிறது .

Related posts