பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார் பேரறிவாளன். இந்நிலையில், கடந்த 18ம் தேதி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
தீர்ப்பு
பேரறிவாளன் விடுதலைக்காக பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் தாமதம் செய்தார். இதனால்தான் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அவரை விடுதலை செய்து தீர்ப்பை வழங்கினர்.
வரவேற்பு
பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்நிலையில், பேரறிவாளனை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
முதல்வர் அறிக்கை
அந்த அறிக்கையில் ’30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும். ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
திருமாவளவன்
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது பேரறிவாளன் விடுதலை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு
பேரறிவாளனை விடுதலை செய்ததை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றனர் என்று செய்தியாளர் கேள்வி கேட்டார். அதற்கு உச்ச நீதிமன்றமே அவரை விடுதலை செய்துவிட்டது. அதனால் தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார் என்று திருமாவளவன் பதிலளித்தார்.
உடனே செய்தியாளர்கள் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என சொல்லவில்லையே என்று கேள்வி எழுப்பினார்கள். அவர் குற்றவாளி என்றும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.