சினிமாதமிழ்நாடுவெள்ளித்திரை

பல விருதுகளை தட்டி சென்ற ‘முத்துநகர் படுகொலை’ – Movie Review !

2017 இல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மெரினா புரட்சி என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டவர் தான் இயக்குனர் M.S.ராஜ். இவரின் அடுத்த ஆவணப்படைப்பு தான் முத்துநகர் படுகொலை (Pearl city Massacre ).

கதை களம்

பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தே இப்படம் துவங்குகிறது. 1 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் முதல் காட்சியே சுடப்பட்டு விழுந்த மக்கள் துடிப்பதைக் காட்டி நம் மனத்தைக் கலங்கடிக்கிறது. பெரும்பாலான ஆவணப்படங்களின் குறையை சலிப்புத்தட்டும் திரைக்கதைகள் தான். ஆனால் இந்த ஆவணப்படமோ ஒரு நிமிடம் கூட சலிப்புத்தட்டாத விறுவிறுப்பான திரைக்கதையோடு நகர்கிறது. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும் நம்முள் சற்றும் குறையாது கடத்துகிறார் இயக்குனர் .

2018 மே 22 அன்று நடந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக சொல்லி, ஒட்டு மொத்த படுகொலையையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கியது யார் ? தொடங்கப்பட்டதன் காரணம் என்ன ? ஸ்டெர்லைட் போராட்டத்தில் 100 நாட்கள் நகர்வில் நடந்தது என்ன ? சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் யார் ? துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவர்களின் நிலை என்ன ? என்று பலவற்றையும் உருக்கமாகக் காட்டியுள்ளார்.

கொல்லப்பட்ட மக்களையும், அவர்களை இழந்து வாடும் உறவினர்களையும் காட்டி மனித வாழ்வின் பேரவலத்தை ஸ்டெர்லைட் என்ற ஒரு நிறுவனம் நிகழ்த்தியுள்ளதை உணர்த்துகிறார்.அதுவும் கடைசி 20 நாட்களில் நடந்த முறைகேடுகளையும், அரசின் அடக்குமுறையையும் வெளிக்கொண்டு வருகிறார்.

ஸ்டெர்லைட் படுகொலைக்கு துணை போன அரசின் அமைப்புகள், அதன் ஊடாக நடந்த அரசியலையும் வெளிப்படுத்துகிறார். பயங்கரவாத இயக்கங்கள் கூட தாங்கள் செய்த ஆயுத நடவடிக்கைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும். ஆனால் ஒரு அரசும், காவல்துறையும் செய்த துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்ததற்கு இன்று வரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் நச்சுப்புகை மற்றும் நச்சு திடக்கழிவுகள் பாதிப்புகள் நிகழ்ந்ததும், 24 ஆண்டுகள் ஆலை இயங்கக் காரணம் யார் ? என்ற கேள்வி அதிகாரமையத்தை அதிரச் செய்கிறது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த அளவிற்கு மக்கள் மீது அக்கறையின்றி நடந்துள்ளது என்பதும் வெளிப்படை.மனித உரிமை ஆணையங்களே இறுதியில் மக்களைக் கைவிட்டது ஜனநாயகத்தின் கடைசிக் கூத்து. இழப்பீடு வழங்கி விட்டதால் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று மனித உரிமை ஆணையம் சொன்னது அநீதியின் உச்சம்.

மெரினா புரட்சி படத்தை வெளியிடவே படாத பாடுபட்டு, முதல் படமே என்னை இப்படி வருத்துகிறது என்று சோர்ந்து போய் சொன்னவர் தான் இயக்குனர் ராஜ். ஆனால் அவர் மனதிலுள்ள சமூக அக்கறை அவரை விடாது துரத்தியதன் விளைவே மீண்டும் அதிகார மையத்திற்கு எதிராக அபாய சங்கு எழுப்பியுள்ளார்.

இயக்குனர் பேச்சு

தன் படம் குறித்து பேசிய இயக்குனர், ‘தனது படத்தை பிரபல ஊடகங்கள் புறக்கணிக்கிறது. ஆங்கில ஊடகங்கள் இதை ஒரு நியாயமான போராட்டமாகவே கருதவில்லை. தமிழ் ஊடகங்கள் இது திமுக அரசுக்கு எதிரான படமாக இருக்குமோ ? அதனால் நமக்குப் பாதிப்பு ஏற்படலாம் என பயப்படுகின்றனர். ஆனால் எனது படம் திமுகவுக்கு எதிரானதல்ல. நடந்தது என்னவோ அதை மட்டுமே பதிவு செய்துள்ளேன். எனது படத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் பார்க்க வேண்டுமெனவும்’ என கூறியுள்ளார்.

விருதுகள்

இந்த ஆவணப்படமானது, சிங்கப்பூரில் நடந்த 29வது உலக திரைப்பட திருவிழாவில் விமர்சகர்கள் தேர்வு விருது பெற்றது. 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருது பெற்றது. 30வது சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ தேர்வு விருதும் கிடைத்துள்ளது.

இயக்குனர் M.S.ராஜ் இயக்கிய முத்துநகர் படுகொலை படத்தை www.tamilsott.com இணையதளத்தில் பார்க்கலாம்.

Related posts