வருகின்ற டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலை வெல்வதற்காக அம்மாநில பாஜக கட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் செலவிற்கான பணத்தை பொதுமக்களிடமிருந்து நிதியாக திரட்ட பாஜக முடிவு செய்துள்ளது.
பாஜக வின் தொடர் ஆட்சி
குஜராத் சட்டமன்றத்தில் 182 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தொடர் ஆட்சியை பிடித்து வருகிறது. டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இந்த முறையும் வென்று ஆட்சி அமைப்பதற்காக, காங்கிரஸ் கட்சியினை பலவீனமாக்கும் பல்வேறு முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது.
ரூ.200 கோடி நிதி
குஜராத் மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் தலைமையியல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தலுக்கு தேவையான செலவாக ரூ.200 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான நிதியை பொதுமக்கள் மற்றும் அனுதாபிகளிடமிருந்து திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரொக்கம் வேண்டாம்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல் “பாஜகவின் தேர்தலுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் காசோலையாகவே வழங்க வேண்டும், ரொக்கபணம் பெற்றுக்கொள்ள மாட்டோம். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான நிதியாக தேசிய தலைமை 163 ரூபாய் கோடி நிதியாக கொடுத்தது. குஜராத் பாஜக 88 கோடி 50 லட்சம் நிதியாக திரட்டி கொடுத்தது.
கடந்த தேர்தலில் மொத்தமாக 253 கோடி ரூபாய் தேர்தலுக்கான நிதியாக திரட்டப்பட்டது. இந்த தேர்தலில் மாநில நிர்வாகமே தேர்தலுக்கான செலவாக ரூ.200 கோடி நிதியாக திரட்ட முடிவு செய்துள்ளது” என கூறினார்.