Editor's Picksசமூகம்தமிழ்நாடு

பிழைப்புக்கு சென்ற மீனவ பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற வடமாநில கும்பல்!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான சந்திரா என்ற மீனவ பெண்ணை 6 பேர் கொண்ட வடமாநில கும்பல் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனார்

ராமநாதபுரம், ராமேஸ்வரம் அருகே வடகாடு எனும் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் கடலுக்கு சென்று கடல்பாசியை சேகரித்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அக்கிராமத்தை சேர்ந்த 45 வயதான சந்திரா என்ற மீனவ பெண் கடல் பாசி சேகரிப்பதற்காக காலையில் கடலுக்கு சென்றுள்ளார்.

எரிந்த நிலையில் உடல்

காலையில் சென்ற சந்திரா மாலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சந்திராவின் கணவர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசாரும் , கிராம மக்களும் வடகாடு காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது, காணாமல்போன சந்திராவின் உடல் அரைநிர்வாணமாக பாதி உடல் எரிந்த நிலையில் கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இறால் பண்ணை

இதுகுறித்து அருகில் உள்ள இறால் பண்ணையில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பணிபுரிபவர்கள் முரணாக பதிலளித்துள்ளனர். ஏற்கனவே,  இறால் பண்ணையில் பணிபுரியும் 6 வடமாநிலத்தவர் சந்திராவை கேலி, கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி அங்கு பணிபுரியும் வடமாநிலத்தவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் இவர்களை ஒரு அறையில் கிராம மக்கள் பூட்டி வைத்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

போலீசார் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முற்பட்டனர். ஆனால், கிராம மக்கள் உடலை கைப்பற்ற விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் அனுமதித்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

அறையில் பூட்டி வைக்கப்பட்ட 6 வடமாநிலத்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில்,  இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த வடமாநில கும்பல் கஞ்சா போதையில் சந்திராவை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் தெரிய வந்தது.

மேற்கொண்டு விசாரணை

முதற்கட்ட பிரேத பரிசோதனையில் 3 பேர் சந்திராவை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அந்த 6 பேரில் எந்த 3 பேர் இந்த அயோக்கியத்தனமான வேலையே செய்தது என போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts