தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வருமான வரி தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
எஸ்.ஜே.சூர்யா
1999ம் ஆண்டு வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்த நிலையில் தனது இரண்டாவது படமான குஷியில் நடிகர் விஜயை வைத்து இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. இதன்மூலம் தனது அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாநாயகர்களை வைத்து இயக்கிய இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.
நடிகராக அறிமுகம்
மேலும், 2004ம் ஆண்டு வெளியான நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை தானே இயக்கி, நடித்தும் இருந்தார். நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்த இவருக்கு 2007ம் ஆண்டு வியாபாரி படத்தின் மூலம் வேறு இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து 2016 வெளியான இறைவி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
வழக்கு பதிவு
இதனையடுத்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் ஆகிய படங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்தது இவர் நடிப்பில் கடமையை செய், பொம்மை போன்ற படங்கள் வெளியாக உள்ளது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா மீது கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் 6 வழக்குகள் தொடரப்பட்டது.
மனுத் தாக்கல்
கணக்குக்கான மறு மதிப்பீட்டு நடைமுறைகள் நிலுவையில் இருப்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே. சூர்யா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முறையான சோதனைக்கு பிறகு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று வருமான வரித்துறை தெரிவித்தது.
மனு தள்ளுபடி
இந்நிலையில், இரு தரப்பு மனு மீதும் விசாரணை நடத்திய நீதிபதி, பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறினார். மேலும், அவரது மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.