ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுஏஇ அணியில் தொடக்க வீரர்கள் அர்யான்ஷ் சர்மா ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அலிஷான் ஷராஃபு மற்றும் ஷொயப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.
இதில் ஷோயப் கான் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுபக்கம் அலிஷான் ஷராஃபு 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, 68 ரன்களை சேர்த்திருந்த ஷோயப் கானும் ஆட்டமிழந்தார். இதனால் யுஏஇ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், குல்பதீன் நைப் 13 ரன்களிலும், செதிகுல்லா அடல் 16 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஜத்ரான் மற்றும் தார்விஷ் ரசூலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்து அசத்திய இப்ராஹிம் ஜத்ரான் 53 ரன்களில் விக்கெட்டை இழக்க, தார்விஷ் ரசூலியும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 700 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

