நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் வரை இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ரத்த அழுத்தம் (BP). காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறோமோ இல்லையோ, ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை தேடி எடுப்பது பலரது அன்றாட வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் மாத்திரையை தவறவிட்டால் என்னவாகுமோ என்ற பயமும், வாழ்நாள் முழுவதும் இந்த மாத்திரைகளை சுமக்க வேண்டுமே என்ற சலிப்பும் பலருக்கு உண்டு. பிஸியான வேலைகளுக்கு இடையே மாத்திரை போடுவதை மறந்துவிடுவது, வெளியூர் செல்லும்போது மாத்திரை அட்டையை எடுக்க தவறுவது என நடைமுறை சிக்கல்கள் ஏராளம். இந்த சூழலில், “தினமும் மாத்திரை போடுவதற்கு பதில், ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் ஊசி செலுத்திக்கொண்டால் போதும்” என்கிறது தி லான்செட் ஆய்வு.
தற்போதைய சவாலும் புதிய தீர்வும்: உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு ‘சைலண்ட் கில்லர்’ (Silent Killer). இது இதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது தெரிந்திருந்தும், பலரால் மாத்திரைகளை தடையின்றி உட்கொள்ள முடிவதில்லை. இந்தியாவில் மட்டும் மூன்றில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
ஆனால், இதில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே தங்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிவதாக ஆய்வு கூறுகிறது. மேலும், முறையான சிகிச்சையில் இருப்பவர்களிலும் மிக குறைந்த சதவீதத்தினரே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு காரணம், தினசரி மாத்திரை உட்கொள்வதில் உள்ள நடைமுறை சிரமங்கள். இந்த சூழலில், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் செலுத்தப்படும் நீண்ட கால ஊசி மருந்துகள் (Long-acting injections) தற்போது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
பொதுவாக நாம் உட்கொள்ளும் மாத்திரைகள் உடலில் சில மணிநேரங்கள் மட்டுமே தங்கி வேலை செய்யும். அதனால் தினமும் மாத்திரை எடுக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த ஊசி மருந்து உடலில் உள்ள ‘ரெனின்-ஆஞ்சியோடென்சின்’ (Renin-angiotensin system) என்ற ஹார்மோன் மண்டலத்தை குறிவைத்து செயல்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த மண்டலம் தான் நமது ரத்த நாளங்களின் சுருக்கம் மற்றும் நீர்ச்சமநிலையை கட்டுப்படுத்துகிறது. இந்த ஊசியை செலுத்தும்போது, அது ரத்த அழுத்தத்தை உயர்த்தும் காரணிகளை நீண்ட காலத்திற்கு தடுத்து நிறுத்துகிறது எனவும் இதன் மூலம் ஒருமுறை ஊசி போட்டால், பல மாதங்களுக்கு ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும் என்கிறது ஆய்வு.
யாருக்கெல்லாம் இது வரப்பிரசாதம்? இந்த ஊசி முறை பயன்பாட்டிற்கு வரும்போது, அது பல தரப்பட்ட மக்களுக்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். குறிப்பாக, பலவிதமான நோய்களுக்குப் பத்து பதினைந்து மாத்திரைகள் எடுக்கும் முதியவர்களுக்கு, ஒரு மாத்திரை குறைவது வரப்பிரசாதமாகும்.
வேலையின் அவசரத்தில் அல்லது பயணங்களில் மாத்திரை போட மறந்துவிடுபவர்களுக்கு இது பாதுகாப்பானது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் ஒவ்வொரு முறையும் மருந்துச் சீட்டுக்காகவோ, மாத்திரை வாங்கவோ அலைவதைத் தவிர்க்கலாம்.
முழுமையான மாற்றமா? மாத்திரை உட்கொள்ள சிரமப்படுபவர்களுக்கும், அதிகப்படியான இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கும் இது ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

