ஆன்மீகம்

வைணவம் வளர்த்த வல்லவர் – ஸ்ரீமத் ராமானுஜர்

பக்தியுடன் வேதாந்தத்தை மிகவும் அற்புதமான முறையில் இணைத்து வேதாந்த நெறிக்கு காவிய நடையில் புது மெருகூட்டியவர் ஸ்ரீமத் ராமானுஜர். கி.பி.1017ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார் ஸ்ரீமத் ராமானுஜர். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். ராமானுஜர் தனது வீட்டிலேயே தங்கியிருந்து தன் தந்தையிடமே வேதங்களை எல்லாம் கற்று வந்தார்.
6-ம் வயதில் தனது தந்தையை இழந்தார். 17 வது வயதில் தஞ்சம்மாளை திருமணம் செய்தார். பின்பு யாதவப்பிரகாசர் என்பவரிடம் பாடங்களை கற்றார். பாடம் தொடர்பான பல்வேறு விஷயங்களில், ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் குருவுக்கு கோபம் வந்து, ராமானுஜரை கொன்றுவிடவும் திட்டமிட்டார்.

இப்படித்தான் விசிஷ்டாத்வைதத்தின் விதை முளைத்தது. அதன் பிறகு திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து விட்டார். இதையடுத்து ராமானுஜரின் பெயரும் புகழும் எல்லா இடங்களிலும் பரவியது. பிற்காலத்தில் தன் சொல் வன்மையாலும், இறைவனின் கருணையாலும் ஆயிரக்கணக்கானோரை வைணவ சம்பிரதாயத்தின் பால் ஈர்த்தார் ராமானுஜர்.

ஜாதி, பேதமற்ற சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர்.
உறங்காவில்லி தாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது சீடராக ஏற்றுக்கொண்டவர்.

விஷ்ணுதாசர்கள் இன்றும் போற்றி மகிழும் வேதாந்த சங்கரஹம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், கீதா பாஷ்யம், கட்யத்ரயம் ஆகியவற்றை உலகுக்கு அளித்தார். கோயில்களில் பின்பற்றப்படும் திருவாராதனத்தை ஒழுங்குபடுத்தும் நித்யம் என்ற கிரந்தத்தையும் வகுத்தார். அவர் வாழ்ந்தது கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாகும். அவர் வாழ்நாளிலேயே அடியார்களும் பக்தர்களும் ‘தெய்வம்’ என்றே கொண்டாடினார்கள். ஒரு மாபெரும் நாட்டையே பரிபாலிப்பதுபோல் திருவரங்கனின் சாம்ராஜ்யத்தைப் பரிபாலித்தவர்.அரங்கன் ஆலயத்துக்கு வந்து, ‘கோயிலொழுகு’ ஏற்படுத்தி, ஓர் மன்னர்போல விளங்கி ‘யதிராஜர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தருளினார். பிரம்ம சூத்திரத்திற்கும், கீதைக்கும் அவர் செய்த பாஷ்யங்கள் பிரசித்தமாயுள்ளன.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி, திருவரங்கத்து அமுதனார் என்ற ஒரு சீடரால் உருவாக்கப்பட்டு, ராமானுஜர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு அவர் விருப்பத்தின்படி நாலாயிரப் பிரபந்தத்தின் முடிவில் சேர்க்கப்பட்டது. வைணவ சம்பிரதாயம் நீடித்து வளர வேண்டியதற்கான சிறந்த ஏற்பாடுகளைச் செய்தார். நாராயண சேவைக்கென எழுபத்தைந்து தலைவர்களை நியமித்தார். செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செவ்வனே செய்து முடித்தார்.
பிறகு தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார். 120 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி.1138–ல் பரமபதம் அடைந்தார்.

Related posts