அறிவியல்

பிரபஞ்சமும் பெருவெடிப்பு கோட்பாடும்

விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை.

“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்ற வில்லை ! அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள்வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது”, என்று கூறினார் முதல் நூற்றாண்டு ஞானியான செனெகா.

2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் “பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு” விடை கொடுத்து விடலாம் என்று சில பௌதிக விஞ்ஞானிகள் கூறினார்கள் . பிரபஞ்சவியல் நிபுணர்கள் [Cosmologists], நாற்புறப் பரிமாண விண்மீன் [Four-Dimensional Star] சிதைவாகிக் கருந்துளைக்குள் விழுந்து சிதறிய எச்சங்களிலிருந்து, நமது பிரபஞ்சம் உருவானது என்று இப்போது ஒரு புதியதோர் கோட்பாட்டை அறிவித்துள்ளார்கள் .  இந்தப் புதுக் கோட்பாடு, ஏன் பிரபஞ்சம் எல்லாத் திசைகளிலும் சமநிலையில் [Uniform State] காணப்படுகிறது என்பதற்கு விளக்கம் தருகிறது.

“ஒற்றைத்திணிவு” [Singularity] எனப்படும் எல்லையற்ற திணிவு நிலைப் புள்ளி [Infinitely Dense Point] வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்த வெடிப்பு எப்படித் தூண்டப்பட்டது என்று யாரும் விளக்கம் தரவில்லை. நமக்குத் தெரிந்த பௌதிக விதிகளாலும் [Laws of Physics] அந்த வினாடியில் என்ன நேர்ந்தது என்று கூற இயலவில்லை. மேலும் எப்படிக் கொந்தளிப்பான பெரு வெடிப்பில் முழுமையான சமநிலை உஷ்ணத்துடன் பிரபஞ்சம் நிலை பெற்றது என்று விளக்குவதும் மிகச்சிரமமானது. காரணம் நிரந்தர உஷ்ணநிலை பரவிடப் போதுமான தருணம் இருக்கவில்லை.

பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும் [Microscopic], விரிந்து குமிழிபோல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய [Macroscopic] எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ் (George Gamow). அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ். பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background  Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்.

பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு  நியதியைத்’ தற்போது பெரும்பான்மை யான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெட்பக்  கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஓர் அகிலப் பெரு வெடிப்பு நிகழ்ந்து [Cosmic Explosion], அதன்பின் பிரபஞ்சம் பெருகி, விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது.

பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற்சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது. ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Force], மின்காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது! விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திர வியலையும் [Quantum  Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டுபிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி’ [String Theory] அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி’ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி’ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டுபிடிக்க முற்பட்டு வருகிறார்கள்

Related posts