ஆன்மீகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் வரலாறு

“அரங்கம்” என்றால் “தீவு” என தமிழில் ஒரு பொருள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு :

இக்கோவிலின் இறைவனாகிய பெருமாளின் பெயர் ரங்கநாயகர். தாயார் ரங்கநாயகி.  ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார்.

அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பினான் விபீஷணன். இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீரத்திற்கு சென்றான் விபீஷணன்.

அவன் வருவதற்கு நேரமானதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயகர். பிறகு வந்த விபீஷணன், நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்பதை கண்டான். அச்சிலை மிகப்பெரிய அளவில் உருமாறியிருந்தது. அதை அகற்றுவதற்கு முயற்சித்தான்.

அப்போது நாராயணன் அசரீரியாக, தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே, அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே வீற்றிருப்பதாகவும் கூறினார்.

அக்காலகட்டத்தில் இப்பகுதியை ஆண்ட  தர்ம வர்ம சோழன் ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். சில காலங்களில் காவிரி நதியில் ஒரு மிகப்பெரும் வெள்ளம் வந்தது. அக்கோவில் ஆற்றுமணலில் முற்றிலும் புதைந்து போனது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தேடலானான்.

இங்கு வந்த போது ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு  வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி  மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது.

 

இதை வைத்து புதைந்த கோவில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் “கிளிச்சோழன்” என அந்த சோழ மன்னன் அழைக்கப்பட்டான்.

திருக்கோவில் சிறப்பு :

5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது.

பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இந்திய கோயில்களிலேயே மிக உயரமான இக்கோவிலின் கோபுரம் 1987ல் அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது.

வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான கோவில். ஆழ்வார்கள் அனைவராலும் பாடல் பெற்ற கோவில். இக்கோவிலில் தான் அழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் அரங்கனுள் ஐக்கியமானாள்.

இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் தமிழை முதன்மையாக கொண்டு கோவில் சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு செய்து நிர்வாகத்தை சீர் செய்தார்.

இந்த கோவிலில் இவரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது. இங்கு தான் கம்பரால் , கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது.

மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறக்கப்படும்.

இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இக்கோவில் யுனெஸ்கோ அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts