சென்னை பாரிமுனை. வாகன நெரிசலும் இரைச்சலும் ஜன நெருக்கடியும் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் அமைதியின் சொரூபமாய் வீற்றிருக்கும் அன்னை காளிகாம்பாள். உலகில் சில ஆலயங்களில் மட்டுமே காணப்படும் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை இந்த ஆலயத்தில் இருப்பது தனி சிறப்பு.
நான் மேலே சொன்ன தகவல், சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தை பற்றி தான்.
கி.பி. 1640 ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உள்ளே இக்கோவில் அமைந்திருந்தது. பின்னர் தம்புச்செட்டி தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
கடற்கரையோரம் வாழ்ந்த மீனவ மக்களால் அதிகம் வழிபடப்பட்டு வந்த இந்த அம்மனுக்கு நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் உண்டு.
எண்ணற்ற முனிவர்களும்,தேவர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, 1677 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி இந்த ஆலயத்திற்கு வந்தது அம்மனை தரிசித்தார் என்று வரலாற்று குறிப்புகள் உள்ளன.
மகாகவி பாரதியார் இந்த ஆலயத்தில் உள்ள அம்பாளை மனதில் வைத்து தான் “யாதுமாகி நின்றாய் காளி” என்ற பக்தி பாடலை எழுதினார்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரன், இங்குள்ள அம்பாளை வழிப்பட்ட பின்னரே செல்வா வளங்களை பெற்றான் என்று புராண கதையும் உள்ளது.
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.
இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.