திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை அவமரியாதை செய்வதால் விஜய் உடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தமிழக மாவட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை குழு, வேட்பாளர் நேர்காணல், விருப்பமனு பெறுதல் என அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாக வருகின்றன.
மேலும், தற்போதைய நிலவரப்படி இந்த தேர்தல் திமுக கூட்டணி, அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக என மும்முனை போட்டியாக இருக்க போகிறது. அதிமுக – தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, ஐஜேகே, தமாக, அமமுக, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என இதுவரை 8 கட்சிகள் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ளன.
அதே போல, திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தற்போது வரை அதே அணியில் அங்கம் வகித்து வருகிறது. மேலும் இந்த முறை கூடுதலாக மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெக, தங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம்’ என கூறியும், எந்த கட்சியும் கூட்டணி வைப்பதாக அறிவிக்கவில்லை. மேலும், கூட்டணிக்கு எந்த கட்சிகளாவது வந்தாலும், இல்லையென்றாலும் முதல்வர் வேட்பாளாரக விஜய்யை முன்னிறுத்தி தனியாக களம் காண தவெக தயாராகி வருகிறது. அதற்காக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திமுக அதன் கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னமும் துவங்கவில்லை. திமுக விரைந்து கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கும் என நினைத்த காங்கிரஸ் கட்சியோ, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குழுவை அமைத்து திமுக தலைவரை சந்தித்தது. ஆனாலும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படாததால் பேச்சுவார்த்தை தொடர்பான எவ்வித அறிவிப்பும் இன்றி இருக்கிறது.
இந்த காலதாமதமே காங்கிரஸ் கட்சியில் ஒரு பக்கம், தவெக-விற்கு செல்லலாமா? என்ற பேச்சுகளும் எழுந்தன. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ராகுல் காந்தியிடம் பேசினார். இதையடுத்து ஒரிரு நாளில் பேச்சுவார்த்தை துவங்கும் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். ஆனாலும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி, திமுகவிடம் தொகுதியின் எண்ணிக்கையை அதிகரித்து கேட்டதாகவும், மேலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் திமுக கூட்டணி பேச்சுவார்தை குழு அமைக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தமிழ்நாடு, ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை ராகுல் காந்தி மற்றும் மமல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினுள் கூட்டணி தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 74 பேரை ராகுல் காந்தி டெல்லியில் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மாவட்ட தலைவர்களுடான சந்திப்பில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், ”புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த கூட்டம் இருந்தது. எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும். பூத் அளவில் எப்படி பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் ஒற்றுமையாக பணியாற்றினால் உங்களுக்கான பதவிகள் வந்து சேரும் என ராகுல் காந்தி கூறினார். எந்த சூழலிலும், குரூப்பிஸத்தில் சிக்கி கொள்ள வேண்டாம்” என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆலோசனைக்கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களில் 74 பேரில், 67 பேர் வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை அவமரியாதை செய்கிறது என கட்சி நிர்வாகிகள் உணர்வதாகவும், இந்த தேர்தலில் விஜய் உடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தமிழக மாவட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அதிகமான எண்ணிக்கையில் போட்டியிடுவது மட்டும் அல்லாமல், வாக்கு சதவீதம் கூடும் என தமிழக நிர்வாகிகள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்க்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு இன்னும் அமைக்கப்படாதது வருத்தமாக உள்ளது. நாளை இது தொடர்பாக முதல்வரை சந்திக்க உள்ளோம். இந்த தாமதத்தால் கடைசி நேரத்தில் வேட்பாளர் தேர்வு செய்வது சிரமம் ஆகிவிடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் நேரமே இருக்காது. காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வருவதற்கான கால அட்டவணை தயாராக உள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்தால் தலைவர் வருகை நடைப்பெறும்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ”நவம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுவை தேசிய தலைமை அறிவித்தது. டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினோம். ஆனால் 70 நாட்களாக திமுகவின் அதிகாரப்பூர்வ அழைப்புக்காக காத்திருக்கிறோம். எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதை விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்க வேண்டும்.
திமுகவுடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காததால் காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த வலியோடு இருக்கின்றனர். தேர்தல் நடைபெறுவதற்கு குறைந்த நாட்களே இருப்பதால், விரைவில் தொகுதி பங்கீடை இறுதி செய்து தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். திமுக விரைவில் குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.” என ஆதங்கத்துடன் கூறினார்.
இதனிடையே வரும் 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடைபெறும் என திமுக தலைமை இரவு 10.30 அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

