பிரபல பாடகர் கே கே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில் திடிரென நேற்று இரவு காலமானார்.
நூறுக்கும் மேற்பட்ட பாடல்கள்
கேரளவை சேர்ந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்துக்கு 53 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். திரையுலகிற்கு அறிமுகமாகும் முன்னரே 3500 தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெரும் “ஸ்ட்ராபெரி கண்ணே” என்னும் பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கே கே தமிழில் 50ம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
திடீர் மரணம்
நேற்று, கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கே கே கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் பாடல்கள் பாடியுள்ளார். பின்னர், இசை நிகழ்ச்சியின் முடிவில் உடல்நல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் கே கே அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். ஹோட்டலில் மயங்கி விழுந்த கே கே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கே கே மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.
இயற்கைக்கு மாறான மரணம்
கே கே மரணத்தை அடுத்து நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில், கே கே வின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கே கே வின் உடல் மற்றும் தலையில் காயங்கள் இருந்தாக தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கே கே வின் திடீர் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கே கே வின் குடும்பத்தினர் அனுமதியுடன் கே கே வின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே. எம் மருத்துவமனையில் கே கே வின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதற்காக ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு கே கே வின் உடல் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவில்தான் கே கே வின் மரணம் குறித்த முதற்கட்ட விசாரணைக்கான தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
பிரபலங்கள் இரங்கல்
பாடகர் கே கே வின் திடீர் மரணத்திற்கு, பிரபல பாடகர்கள், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்ளிட்ட பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.