கும்பகோணத்தில் தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மாநில இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்டட பணியை தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டுவிழா
கும்பகோணத்தில் தி.மு.க அலுவலகம் கட்டட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அந்த பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உதயசூரியன் படத்துடன் தங்க முலாம் பூசப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து கட்டட பணியை தொடங்கி வைத்தார். மேலும், இளைஞரணி சார்பில் மூர்த்தி கலையரங்கத்தில் 320 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ‘கலைஞரின் நூற்றாண்டு அறிவாலயம் கட்டிட ஐம்பொன் செங்கலை என்னிடத்தில் கொடுத்து அதற்கு உண்டான பூஜைகளை செய்தனர். மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. இருப்பினும் இதைப் பார்த்து மதவாத சக்திகள் வயிறு எரிய வேண்டும் என்பதற்காகவே அமைதியாக பூஜையில் கலந்து கொண்டேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்
எனக்கும் செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கவில்லை. திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். ஆனால், அதற்கு முன்பே மூத்த உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி கூறிய ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் இதுவரை பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை’ என்று கூறினார் உதயநிதி.

அதனைத்தொடர்ந்து 320 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

