ஆர்த்தி ஸ்கேன் மற்றும் மருத்துவமனையில் வருமான வரி துறையினர் இரவு பகலாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் மலை கோவில் சாலை பகுதியை சேர்ந்தவர் வி.கோவிந்தராஜன் மனைவி கோமதி. கோவிந்தராஜன் சென்னையை தலைமை இடமாக கொண்டு தென் இந்தியா முழுவதும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். மேலும் தனது சொந்த ஊரான கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் நடத்தி வருகிறார்.
ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ்
இவரது மனைவி மருத்துவர் கோமதி கோவில்பட்டியில் உள்ள மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துமனை என நேற்று ( செவ்வாய்கிழமை) 25ம் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை
தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை மற்றும் ஸ்கேன், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என 5 குழுக்கள் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறை சோதனை
இந்நிலையில், கோவில்பட்டி ஆர்த்தி மருத்துமனையின் மேலாளர் மற்றும் 2 ஊழியர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் மேலாளர் மற்றும் பெண் ஊழியர் ஒருவர் வீட்டில் இருந்து மருத்துவமனை தொடர்பான சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் மருத்துவமனை கணக்கு விபரங்கள், ஸ்கேன் மையங்கள் தொடர்பான தரவுகள், மேலும் கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மற்றும் அதன் வருமானம் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நாள்
உரிமையாளர் கோவிந்தராஜன் மனைவி கோமதியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவிலும் தொடர்ந்து நடைபெற்றது.
தென் மாநிலங்களில் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மற்றும் லேப்ஸ் மையங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.