அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
144 தடை உத்தரவு
மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களைக் கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்களை கண்டித்து இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனிடையே மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் ஏக்நாத் ஷிண்டே சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற வழக்கு
தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும், தகுதி நீக்கம் செய்யும் மனு தொடர்பாக துணை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் எனவும் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் பர்திவாலா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வீடியோ கான்ஃப்ரன்சிங் வாயிலாக ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையில் 38 எம்எல்ஏக்கள் தரப்பு தாங்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றதாகக் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்
மனு தாரர்களின் வாதத்தை விசாரித்த நீதிபதிகள் துணை சபாநாயகரின் தகுதி நீக்கம் நோட்டீஸ் தொடர்பாக 16 அதிருப்பதி எம்எல்ஏக்கள் பதில் அளிக்க ஜூலை 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. மேலும், அவர்களின் தகுதி நீக்க நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.