ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா (சீமை கருவேலம்) என்ற காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழக்கூடிய ஆக்கிரமிப்பு தாவரமான சீமை கருவேலம் மரங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு விரைவில் எடுக்க உள்ளது. இந்த நடவடிக்கைக்கான கருத்து கணிப்பு பொது வெளியில் மக்களிடம் கேட்டு வெளியிட பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதிகள் என் சதீஷ் குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின்போது, அட்வகேட் ஜெனரல் எஸ் சிலம்பனன், “ஆக்கிரமிப்பு தாவரங்கள் மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு கொள்கை” எட்டு வாரங்களில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். “ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுவதற்கான வரைவுக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஏற்கனவே (அரசாங்கத்தின்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், அட்வகேட் ஜெனரல் எஸ் சிலம்பனன் கூறுகையில், இந்தக் கொள்கையின் இறுதிக்கட்ட பணிகள் எட்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
அதன்படி, அரசு கொள்கையை இறுதி செய்ய ஜூன் முதல் வாரம் வரை நீதிமன்ற பெஞ்ச் அவகாசம் அளித்தது. இருப்பினும், வரைவுக் கொள்கையை இறுதி செய்ய அரசுக்கு ஏன் எட்டு வாரங்கள் தேவை என்று பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
முன்னதாக, மண்ணின் வளத்தை நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு திறனை முதன்மையாக பாதிக்கும் ஆக்கிரமிப்பு களைகளை முழுவதுமாக அகற்றுவதற்கு இதுபோன்ற விரிவான ஆவணத்தை வைக்க வேண்டியதன் அவசியத்தை உயர்நீதிமன்றம் வினவியதை அடுத்து, ஆக்கிரமிப்பு களைகளை கையாள்வதற்கான கொள்கை வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் ஆக்கிரமிப்பு களைகள், குறிப்பாக ப்ரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா போன்றவற்றால் ஏற்படும் சவால்களை ஆய்வு செய்வதற்காக இந்திய வனச் சேவையிலிருந்து (IFS) வனத்துறை அதிகாரிகளைக் கொண்ட ஏழு குழுக்களை அரசாங்கம் உருவாக்கியது. குழுக்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்குச் சென்று தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தன.