வறுமையே சொத்தாயிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் இராமானுஜன். தந்தை பெயர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார். தாய் கோமளம். பிறந்தது ஈரோட்டில் தாய்வழிப் பாட்டி வீட்டில் (1887 டிசம்பர் 22) என்றாலும் ஒரு வயதிலிருந்தே வளர்ந்து வாழத் தொடங்கியது சொந்த ஊரான கும்பகோணத்தில் தான்.
இராமானுஜன் படிப்பில் படுசுட்டி. அபார நினைவாற்றல் உடையவர். படிக்கிற காலத்தில் ஒரு புத்தகத்தை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்து விடுவார். ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது பள்ளியில் மட்டுமல்ல ஊரிலேயே முதல் மாணவன் அவர்தான் கணக்கில் புலி. அப்பாவுக்கு துணிக்கடையில் கணக்குப் பிள்ளை உத்யோகம். மாத சம்பளம் இருபது ரூபாய். அந்தச் சொற்ப ஊதியத்தில்தான் குடும்பம் தன்னுடைய சாப் பாடு, துணிமணி மற்றும் வீட்டுச் செலவுகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலை. இராமானுஜத்துக்குப் பசி பழகி விட்டிருந்தது.
பசியில் வாடினாலும் உணவுக்குப் பதில் கணக்குதான் அவருடைய சிந்தனையில் இருந்தது. உறங்கினால் கனவிலும் கூட கணக்குத்தான் வந்தது அவருக்கு. தனிமை நாடி கோயிலுக்குச் செல்கிறவர் அங்கேயே களைத்துச் சோர்ந்து கிடப்பார்.
அவரைச் சுற்றிலும் கணக்குகள் போடப்பட்டிருக்கும். வீட்டில் எப்போது பார்த்தாலும் சிலேட்டில் கணக்கு செய்து கொண்டிருப்பது அவருடைய பழக்கம். அந்தப் பழக்கம் வாழ்க்கை நெடுகிலும் இருந்தது.
கும்பகோணத்தில் அவருடைய வீட்டில் சில மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூலம் வெளிநாட்டுக் கணிதமேதைகள் எழுதிய நூல்கள் அவருக்குப் படிக்கக் கிடைக்கும்.
லோனி என்பவர் எழுதிய ‘கோணம்’ என்ற கடினமான நூல் அவற்றுள் குறிப்பிடத்தக்கது. அவற்றிலுள்ள கணக்குகளுக்கு எல்லாம் அவர் விடை கண்டுபிடித்திருக்கிறார். ‘கணிதச் சுருக்கம்’ என்ற நூலில் இடம் பெற்றிருந்த கணக்குகளுக்குப் பதிலாய் பல புதிய சூத்திரங்களை இராமானுஜன் உருவாக்கிக் காட்டினார்.
நண்பர்கள் அவருடைய திறமையை வியந்து பாராட்டினர். இராமானுஜன் கணித பாடத்தில் அதிக அக்கறை காட்டியதால் மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார்.
கல்லூரியின் இரண்டாம் ஆண்டுத் தேர்வில் (எஃப்.ஏ) தோற்றதால் பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் போயிற்று. ஒருபக்கம் பசி பட்டினி, மறுபக்கம் உடற்பிணி. இரண்டுடனும் போராடிக் கொண்டுதான் அவர் தமது கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
அந்நிலையில் 1909 ஆம் ஆண்டு ஜானகி என்ற பெண்ணுடன் அவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது இருபத்திரண்டு. குடும்பம் நடத்துவதற்கான முதிர்ச்சி இல்லை, என்றாலும் பாரம் சுமந்தாக வேண்டுமே.
வேலை தேடி சென்னை சென்றார் இராமானுஜன் அங்கே துறைமுகம் கழகத்தில் வேலை கிடைத்தது. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்துவதில் சிரமம்.
ஆனாலும், தம்முடைய நிலை குறித்து வருத்தமேதுமின்றி கணித ஆராய்ச்சியில் மனமொன்றி விடுவார் அவர். தம்முடைய ஆய்வுக் கட்டுரைகளை அவ்வப்போது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிடுவார்.
அவ்விதமாய் அவருடைய பெயர் வெளிநாடுகளில் பரவத் தொடங்கியது. ஊக்குவிக்கும் மனிதர்களும், பண வசதியும் இருந்திருந்தால் அவர் எப்போதோ உலகப்புகழ் பெற்றிருப்பார்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும் ஒற்றை ஆளாய் நின்று முயற்சிகள் மேற்கொண்டார். இராமானுஜனின் திறமையை முதலில் அடையாளம் கண்டவர் கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) பல்லைக் கழகப் பேராசிரியர் ஜி.எச். ஹார்டி என்பவராவார்.
1914-ல் ஹார்டியின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றார் இராமானுஜன். அவருக்கு 250 பவுண்ட் உதவித் தொகையுடன் ட்ரினிட்டி கல்லூரியில் படிப்பு, ஆராய்ச்சி தொடர அவரே ஏற்பாடு செய்தார்.
அத்துடன் இந்தியாவில் இருந்த இராமானுஜனின் மனைவிக்கு 10 பவுண்ட் அனுப்பி தரவும் வகை செய்தார் அவர். 1912-ல் தாம் எழுதி வைத்திருந்த கணிதக் குறிப்பு களை ஹார்டியிடம் காணபித்தார் இராமானுஜன்.
1894-ல் ரோஜர் என்ற கணிதமேதை வெளியிட்டிருந்த கணிதக் குறிப்புகளைவிட அவை சிறப்பா இருந்ததைக் கண்டார் ஹார்டி. இராமானுஜனின் கணிதத் திறன் இங்கிலாந்திலுள்ள கணிதப் பேராசிரியர்களை வியப்படையச் செய்தது.
ஹார்டியுடன் இணைந்து கணிதத்தில் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். 1918-ல் லண்டன் “ராயல் சொஸைட்டி’ இராமானுஜத்தைத் தங்கள் கழகத்தில் உறுப்பினராக்கி கொண்டது.
எஃப்.ஆர்.எஸ் (Fellow of Royal Society) விருது வழங்கிக் கவுரவித்தது. லண்டன் சீதோஷ்ண நிலை அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
உடல்நிலை கடுமையாய் பாதிக்கப் பட்டது. ஹார்டி உள்ளிட்ட பேராசிரியர்கள் அவரைக் குணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஒரு வே பலனளித்தது. இராமானுஜன் இந்தியா திரும்பினார்.
இங்கே அவர் நீண்ட காலம் வாழவில்லை. ஆயினும், மருத்துவ சிகிச்சை பெற்ற நாட்களிலும் கூட தம்முடைய கணித ஆராய்ச்சியை அவர் தொடர்ந்திருக்கிறார். இருந்தென்ன, 1920 ஏப்ரல் 26-ஆம் நாள் காலம் அவரைக் கைவிட்டு விட்டது.
இறுதி மூச்சு நிற்கிற கணத்திலும் கையில் கணித நோட்டுடனும், பேனாவுடனும் இருந்தார் அவர். 33 வயது என்பது கொஞ்சந்தான். ஆனால், அந்த வயதிற்குள் வேறெந்த அறிவியல் மேதையும் பெற்றிருக்க முடியாத பெரும் புகழை இராமானுஜன் பெற்றுவிட்டார்.