புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது செய்யப்பட்டார்.
பணம் திருட்டு
புதுச்சேரி சோலை நகர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மகேஸ்வரி. 41 வயதான இவர் காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கைப்பையை வைத்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அதை நோட்டமிட்ட 27 வயதான காளிதாஸ் என்ற நபர் அந்த கைப்பையில் இருந்த 20,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார்.
விசாரணை
மகேஸ்வரி திரும்பி வந்து பார்த்த போது வாகனத்தில் வைத்திருந்த பணம் காணவில்லை. மேலும், அவர் இது குறித்து பெரியக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பெயரில் போலீசார் அந்த பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை திருடியவரின் பெயர் காளிதாஸ் என்றும் அவர் ஐஆர்பிஎன் காவலர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது காளிதாஸ் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும் இதனால் தான் கள்ளச்சாவி வைத்து வாகனத்தில் இருந்த பணத்தை திருடியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

