மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியானா நிரவ் மோடி, பஞ்சாப் நேசஷன் வங்கியில் சுமார் 11,500 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டவர். கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றதை தொடர்ந்து நீரவ் மோடியின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ள நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர முயற்சிகள் செய்யப்பட்டன. இதில் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பி சென்றார்.சிபிஐ அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டு 2019ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியா அழைத்துவரும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பண மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் பதவியில் இருந்த சுபாஷ் சங்கரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து தேடிவந்தது. 4 ஆண்டுகள் தேடப்பட்டு வந்த நிலையில் சுபாஷ் சங்கர் எகிப்த் தலைநகர் கெய்ரோவில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. வெளியுறவு துறையின் நீண்ட முயற்சிக்கு பிறகு சுபாஷ் சங்கரை இந்தியாவிற்கு அழைத்து வந்தது சிபிஐ.
நீரவ் மோடியின் ஆட்கள் சுபாஷ் சங்கர் கெய்ரோவில் பதுங்கி இருக்க உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நீரவ் மோடி மற்றும் சுபாஷ் சங்கரை விசாரிப்பதன் மூலம் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நீரவ் மோடி கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் இந்தியா அழைத்து வராதது இந்திய சட்டம் மற்றும் வெளியுறவு துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.