Editor's Picksதமிழ்நாடு

மது விற்றுத்தான் அரசை நடத்த வேண்டுமா? – மருத்துவர் ராமதாஸ் காட்டம்!

மதுவை அரசே விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில்தான் மாநில அரசை நடத்த வேண்டுமா?. மது விலக்கை முழுமையாக தமிழகத்தில் அமல்படுத்தாத வரையில் இளைய தலைமுறை சீரழிவதை தடுக்க முடியாதென தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்த காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.

மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts