Editor's Picksதமிழ்நாடு

வீண் பழி சுமத்துகிறார் ஸ்டாலின் ; எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கடந்த பத்து ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளை, நலத்திட்டங்கள் குறித்து வேண்டுமென்றே சட்டப்பேரவையில் தொடர்ந்து அவதூறு பரப்பிவருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று தமிழகத்தில் அதிகரித்துவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து பேச முயன்ற அதிமுகவினருக்கு பேரவைத்தலைவர் வாய்ப்பு மறுக்கவே அவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பேரவையில் நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர் திமுக நிர்வாகியைப்போல செயல்படுகிறார். எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து கேள்வியெழுப்பினால் நிதியமைச்சர் எங்களுக்கு உரிய பதிலளிப்பதில்லை” என தெரிவித்தார்.

மேலும், ” அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டதாக ஸ்டாலின் பேரவையில் கூறுகிறார். ஆனால், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் சுமார் 1600க்கும் அதிகமான அறிவிப்புகளில் 26 மட்டுமே கைவிடப்பட்டுள்ளது. மற்றவை நிறைவைவேற்றப்பட்டுள்ளது ; சில பணிகள் நடந்துகொண்டிருக்கிறதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, எங்கள் ஆட்சி குறித்து வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின்” எனவும் விமர்சித்துள்ளார் பழனிசாமி.

Related posts