முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று முந்தைய ஆட்சியில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி இருந்தது. இந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக ஆளுநர்கள் காலம் கடத்தி வருகின்றனர்.
இதனால் ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பான பேரறிவாளனின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அதை காரணம் காட்டி நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்த நிலையில் நளினியின் மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவு நகலை நீதிபதிகளின் முன் சமர்பித்தார். மேலும், நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் எந்தவொரு மேல்முறையீடு மனுவும் நிலுவையில் இல்லாத நிலையில் எந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் ஜாமீன் தரமுடியும்? உச்ச நீதிமன்றம் தான் அனைத்து நீதி மன்றங்களை விட உயர்ந்தது. இதனால், உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க முடியாது, உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்று கூறியது. பின்னர், மனு மீதான விசாரணையை நாளை(மார்ச் 24) ஒத்திவைத்தது.
எதிர்க்கும் காங்கிரஸ் முத்தழகன்
நளினிக்கு ஜாமீன் கொடுக்ககூடாது என்று தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுவில் ‘ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, தொடர்ந்து நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். சுதந்திர இந்தியாவில் எந்த வழக்கிலும் எந்த கைதியும் இதுபோல் நீதிமன்றத்தை அணுகியதில்லை. உச்ச நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மட்டும் தான் ஜாமீன் வழங்கியுள்ளது. அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்கு பொருந்தாது. மாநில அரசு கைதிகளுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கும் என்பதால் தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.