பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கிய ராஜ மௌலியின் அடுத்த படைப்பாக ஆர்ஆர்ஆர் படம் வருகிற மார்ச் 25 ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கில் உச்ச நச்சத்திரங்களாக அறியப்பட்ட ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இப்படத்தில் வித்யாசமான பாத்திரத்தில் கலக்கியுள்ளனர். உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்களின் வசதிக்காக பல மொழிகளின் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மேலும் 3d தொழிநுட்ப முறையில் உருவாக்கப்பட்டு வெளியாக உள்ளது.
ராஜ மௌலியின் முந்தைய படங்களை உற்சாகத்தோடு வரவேற்ற கர்நாடகா ரசிகர்கள், படக்குழுவினர் எதிர்பார்க்காத விதமாக ஆர்ஆர்ஆர் படத்தை எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களில் வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு எதிராக BoycottRRRinKarnataka என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஆர்ஆர்ஆர் ரின் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் கலந்து கொண்டு படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்து வந்த ஆர்ஆர்ஆர் படத்துக்கு, தற்போது திடீரென இப்படியொரு தடை செய்ய வேண்டும் என்கிற எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம் என்பதற்கும் தெளிவாக விளக்கம் கொடுத்து விளாசி வருகின்றனர் கன்னட ரசிகர்கள். மேலும், ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் யில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வரையும் விமர்சித்து வருகின்றனர்.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கன்னட ரசிகர்கள் எதிர்க்க காரணமாக கூறுவது: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் உருவாகாதது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். கன்னட நடிகர்கள் இதை தட்டிக்கேட்க வேண்டும், அப்படி கேட்காவிட்டாலும் நாங்கள் கேட்போம். கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
கேஜிஎஃப் 2
ஆர்ஆர்ஆர் படத்தை நாம் எதிர்த்தால் அடுத்த மாதம் வெளியாக உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்துக்கு மற்ற மாநிலங்களில் இதே போன்ற எதிர்ப்பு வந்து ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என கேஜிஎஃப் 2 ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்காமல் கன்னட மொழியிலும் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.