இந்தியாவின் பிசிசிஐயை சீண்டி பார்க்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வருடம்தோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரைப்போலவே பாகிஸ்தானிலும் PSL (பாக்கிஸ்தான் சூப்பர் லீக்) நடத்தப்படுகிறது.
ஆனால் ஐபிஎல் தொடர் மக்களை கவர்ந்த அளவுக்கு PSL தொடர் மக்களிடம் கவனம் பெறவில்லை. ஐபிஎல் தொடர் பல கோடிகளை வியாபாரமாகக் கொண்ட ஒரு களமாக உள்ளநிலையில் PSL தொடர் இப்போதுதான் வளர்ந்து வருகிறது.
ஐபிஎல் தொடரை விரும்பாத பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் நடக்கும்போது சர்வதேச போட்டிகளை நடத்தி தொந்தரவை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு ஐபிஎல் நடந்தபோது நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுற்றுப் பயணத்துக்கு அழைத்தது. இந்தவருடம் ஆஸ்திரேலியாவை வைத்து ஏப்ரல் முதல் வாரம் வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஏலமுறை அறிமுகம்
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு நடத்துவது போல் PSL தொடருக்கும் ஏலம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு PSL தொடருக்கான வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் அணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
ரமீஸ் ராஜா
ரமிஸ் ராஜா பேசியபோது, வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக அணிகள் செலவு செய்யும் பணத்தின் உச்ச வரம்பை உயர்த்த உள்ளதாக கூறினார். இது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு எந்த வீரர்கள் PSL தொடருக்கு பதிலாக ஐபிஎல் போட்டியை தேர்ந்து எடுப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
PSL தொடரில் விளையாடும் வீரர்களுக்கு இதுவரை அதிகபட்ச ஊதியம் 1 கோடி ரூபாய். ஆனால் ஐபிஎல் தொடரில் 17 கோடி. இதை பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரிசெய்வதென்பது சாத்தியமற்ற ஒன்று. பணத்தையும் தாண்டி வீரர்கள் ரசிகர்கள் மிகுந்த தொடரையே விளையாட விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.