இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வந்த தமிழக வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 1983 முதல் 1987ஆம் ஆண்டு வரையிலும் இந்திய அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது ஓய்வு பிறகு அவர் தொலைக்காட்சியில் வர்ணனையாளராகவு பணியாற்றி வந்தார்.
குறிப்பாக அவர் பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ வர்ணனையாளராக 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், தனது விலகலுக்குக் காரணமாக அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில், “எனது 23 ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகும், டாஸ் போடும் நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழாக்களில் வர்ணனை செய்ய எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அதிலும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது கூட, புதிதாக வந்தவர்களுக்கு பிட்ச் ரிப்போர்ட் மற்றும் டாஸ் நிகழ்வுகளில் வர்ணனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என் நிறத்தின் காரணமாகவே நான் வர்ணனையாளர் குழுவில் ஓரங்கட்டப்படுகிறேன். அதனால் எனது சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இந்தப் பணியைத் தொடர விரும்பவில்லை” என்று தெரிவித்தார். அவருடைய பதிவானது சமூக வலைதளங்களில் வைரலானதுடன், விவாத பொருளாவும் மாறியது.
அதேசமயம் தொடக்கத்தில், பிசிசிஐ நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்த அவர், தற்சமயம் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். மற்றோரு பதிவில் அவர், பிசிசிஐ-யின் உயர்மட்ட நிர்வாகிகள் மீது தனக்கு வருத்தம் இல்லை என்றும், வர்ணனைக்கான இடங்களை முடிவு செய்யும் குழுவில் உள்ள சில அதிகாரிகளே இத்தகைய பாகுபாடுகளைச் செய்வதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் தொடங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் வர்ணனையாளர் குழுவில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

