ரமலான் பண்டிகையானது அனைத்து இடங்களிலும் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்தட்டும் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை. இஸ்லாமிய நாள்காட்டியின் ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படும் நாளில் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை (ஈகை திருநாள்) கொண்டாடப்படும்.
இந்நன்னாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகைகளில் கலந்துகொண்டு, உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் நிலைக்கவும், ஒற்றுமையுடன் மக்கள் வாழவும் பிரார்த்தனை செய்வர். அந்த வகையில் இன்று இந்தியாவில் ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரமலான் பண்டிகைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் தள பதிவில், “அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள். இந்த பண்டிகையானது சுயக்கட்டுப்பாட்டையும், சேவையையும், அன்பையும் நமக்கு கற்றுத் தருகிறது. இந்நேரத்தில், நமது சமூகம் மற்றும் நாட்டை வலுப்படுத்த உறுதியெடுப்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, “ஈத்-உல்-ஃபித்ர் நல்வாழ்த்துகள். இந்த பண்டிகையானது அனைத்து இடங்களிலும் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சி, ஆரோக்கியத்துடனும் வாழட்டும்” என்று வாழ்த்தி இருக்கிறார்.
துணை குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், இந்த மகிழ்வான தருணத்தில் நம்பிக்கையும், நல்லிணக்கமும் அன்பும் பெருகி, மகிழ்ச்சி கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

