ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரமலான் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் ஒன்றுகூடி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் முக்கியமான புனித பண்டிகைகளில் ஒன்றான ரமலான் (ஈகைத் திருநாள்), இன்று (மார்ச் 21) தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதன்படி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ரமலான் பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக மார்ச் 19 அன்று ரமலான் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று பிறை தெரியாததால், இன்றைய தினத்திற்கு அது மாற்றப்பட்டது கவனிக்கத்தகுந்தது.
முகம்மது நபிக்கு புனித குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமலான் மாதம் அறியப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் ஆன்மிக ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஒழுக்கத்தை வலுப்படுத்த முடியும் என இஸ்லாமிய பெருமக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்த ரமலான் மாதத்திலும் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், அதன் நிறைவாக இன்று ரமலான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று, கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, பின்னர் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை அருகே உள்ள கோர்ட் சாலையில் அமைந்துள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை புத்தாடைகள் அணிந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
சிறப்பு தொழுகை முடிவடைந்த பிறகு, அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி தங்களின் அன்பையும், பண்டிகை நல்வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். ரமலான் பண்டிகை, சமாதானம், சகோதரத்துவம் மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் ஒரு புனித நாளாக கொண்டாடப்பட்டது.

