தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக புதிய தடை சட்டம் தேவை என்று நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளால் பலரும் ஈர்க்கப்பட்டு விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றது. இதைப் பல்வேறு சமூக அமைப்புகள் பல முறை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
ஆலோசனை
இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக, கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நீதிபதி சந்துரு
இதன்பெயரில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பரிந்துரை
இக்குழு 71 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அளித்தது. அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை அதிகமாகியுள்ளது. இதனால் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.