இந்திய அஞ்சல் துறை சார்பில் அதன் ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி இந்தியா முழுவதும் 20 கோடி வீடுகளில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியை பறக்கவிட இந்திய மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அதன் ஊழியர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு நாமக்கல்லில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால், இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி மோகனூர் சாலை, பரமத்தி சாலை, சந்தைபேட்டை புதூர், உழவர்சந்தை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக இந்த ஊர்வலம் நடைபெற்றது.

