இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஓமிக்ரான் கொரோனா வகைகள் குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகின் எல்லா நாடுகளிலும் கொரோனாத் தொற்று பரவ தொடங்கியது.
உலகின் எந்தவொரு நாடும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியது. அது முதல் அலையாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா பல நாடுகளில் இரண்டாம் அலையை ஏற்படுத்தியது. இதையடுத்து டெல்டா, ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்று அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தியது. இதில் டெல்டா கொரோனா தான் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 2021-ல் பரவிய டெல்டா வைரஸ் நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் திடீரென அதிகரித்ததால், ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்தது. சில இடங்களில் உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்தனர்.
மூன்றாவது அலையென கூறப்பட்ட ஒமிக்ரான் தொற்று ,டெல்டா தொற்று போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சில வாரங்களிலேயே ஓமிக்ரான் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது.
தடுப்பூசி மற்றும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. உலகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சூழலில் தான், இந்தியாவில் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதனிடையே ஓமிக்ரான் தொற்று மற்றும் அதன் இதர வேரியண்ட்கள் தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். BA.2.12.1 தொடங்கி மொத்தம் 8 வகையான துணை வேரியண்ட்கள் உள்ளது என டெல்லியில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனையில் கண்டறியப் பட்டுள்ளது.
ஓமிக்ரான் BA.1 வகை வேரியண்டை காட்டிலும் BA.2 வேரியண்ட் வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் டெல்லியில் 1,009 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த பிப்.10ஆம் தேதிக்குப் பின்னர், பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்புகளில் இது தான் மிக அதிகமாகும். அதேபோல டெல்லியில் இப்போது பாசிட்டிவ் விகிதமும் 5.7% ஆகப் பதிவாகி உள்ளது.