நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி காது அறுவை சிகிச்சை செய்து வந்த ஹோமியோபதி மருத்துவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என பல மருத்துவ முறைகள் நம் நாட்டில் பின்பற்றப்படுகின்றன. எனினும், ஆங்கில மருத்துவ முறையான அலோபதி மருத்துவர்கள் மட்டுமே சில சிகிச்சை முறைகளை கையாள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, ஊசி போடுவது, காயங்களுக்கு தையல் போடுவது, அறுவை சிகிச்சை மேற்கொள்வது ஆகியவற்றை அலோபதி மருத்துவர்களை தவிர, பிற மருத்துவர்கள் செய்யக் கூடாது. மீறி செய்தால் அது சட்ட விரோதம் ஆகும்.
இந்நிலையில், சென்னையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நுங்கப்பாகத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் அறை எடுத்து தங்கி, காதுகளில் ஓட்டையை அடைக்கும் அறுவை சிகிச்சை செய்து வருவதாக மருத்துவக் கல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மருத்துவ இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி, இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள உள்ள குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த ஓட்டலில் மும்பையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் தங்கி இருந்து, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவரது பெயர் பூனம் சர்மா (54) என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி காதுகளில் ஓட்டையை அடைக்கும் அறுவை சிகிச்சை உள்ளிட்டவற்றை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், அவரது உதவியாளரான ராஜாஸ்தானை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். கைதான பூனம் சர்மா, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் ஹோமியோபதி கல்லூரியில் படிப்பை முடித்து, மும்பையில் உள்ள நரிமன் பாயிண்ட் என்ற இடத்தில் ஹோமியோபதி கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பூனம் சர்மா உள்ளிட்ட இருவர் மீது தேனாம்பேட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

