வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், அசாம் மற்றும் மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலிட்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “இன்று முதல் இந்திய ரயில்வே வரைபடத்தில் ஐஸ்வாலும் இடம்பெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வாலுக்கான ரயில் பாதைக்கான அடிக்கலிடும் பணியை நான் தொடங்கி வைத்தேன்.
இன்று அந்த பணி முடிக்கப்பட்டு தேசத்துக்காக அர்ப்பணித்து வைத்துள்ளோம். பல சவால்களை கடந்து பைரபி – சாய்ரங் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது நமது பொறியாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பணியும் குறிப்பிடத்தக்கது.

