தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, சாமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விவசாயிகள்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பு
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நேற்று மாலை முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பற்றி சிறிது நேரம் முன்புதான் எனக்கு தெரிய வந்தது. வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பர்’ என்று துரைமுருகன் கூறினார்.

