வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது.
கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் தளத்தில், ‘இலங்கை, நேபாளத்தை போல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டார். அதனால், ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையையோ? வெறுப்பையோ? தூண்டும் வகையில் அவரது கருத்து இல்லை எனக் கூறி 2025 ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆதவன் அர்ஜுனா மீது புகார் அளித்த புகார்தாரரான எல்.ஐ.சி ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார். இந்த கருத்து ஊடகங்களில் வெளியான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்தது. அதற்கு ரஜினியும், “காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்” என அவரது பாணியில் பதிலடி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இதுபோன்ற சூழலில், ஆதவ் அர்ஜுனா மீதான ரத்து செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

