திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விலகப் போகிறதா?
கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட குறைவான இடங்கள் கிடைத்தால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மார்க்சிய கம்யூனிஸ்ட் எடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகளைவிட 3 தொகுதிகளைக் கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருக்கிறது.
புதிதாகக் கூட்டணியில் வந்து இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி அளிக்கப்பட்ட நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடவும் கூடுதலான தொகுதிகளை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் இன்னமும் தொகுதிப் பங்கீடு எட்டப்படவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இதே கூட்டணியில் கடந்த முறை தலா 6 இடங்களில் போட்டியிட்டு, தலா இரு இடங்களில் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுமே தலா ஓரிடத்தைக் குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டு, தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட்டது.
ஆனால், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தபோதிலும் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், 6 தொகுதிகளுக்கும் குறைவு என்றால் திமுக கூட்டணியிலிருந்து விலகிப் போட்டியிடுவதென மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி இன்று வியாழக்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

