மகனின் திருமண மொய்ப்பணத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கிய நூலகரை ஊர்மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நூலகர் ஜெயக்குமார்
மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலை பகுதியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரின் மகன் சம்பத்குமாருக்கும் காந்திமதி என்றபெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழில், அன்பளிப்பைத் தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் செய்திய வேண்டுமென ஜெயக்குமார் வலியுறுத்தினார். ஆனால் அதையும் மீறி அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், அவர் திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய்ப்பணத்தை அதில் செலுத்தும்படி உறவினர்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் வசூலான ரூபாய் 83 ஆயிரம் ரொக்கப்பணத்துடன், மேலும், சுமார் ரூபாய் 17 ஆயிரத்தை சேர்த்து ஒரு லட்ச ரூபாயை மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு பிரித்து வழங்கினார். இச்செயலால் ஊர்பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

