அரசியல்தமிழ்நாடு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – அனுமதி வழங்குமா திமுக அரசு !

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே இடம் அனுமதிக்க வேண்டும்’ என்று திமுக கூட்டணி இருக்கும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்ச்சைகள்

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றது. மாநிலத்தில் எந்த அரசு ஆட்சி செய்தாலும் விமர்சனகளும் சர்ச்சைகளும் வராமல் இருந்தது இல்லை.
திராவிட மாடல், சமூக நீதி என பேசும் திமுக அரசு சில விஷயங்களில் மென்மைத் தன்மையை கடைபிடிக்கிறது. அல்லது நேர் எதிர் நிலைப்பாட்டை எடுக்கிறது என்று விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. கோவை கல்வி நிறுவனத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு அனுமதி என்று தொடங்கி இன்றளவும் பல சர்ச்சை நீடிக்கிறது.

அண்மையில் தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு முதலில் திராவிட அரசு தடை விதித்தது. இதன்பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்லக்கு சுமக்கும் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதித்தது. இதைப்போல், பசுக்களை பாதுகாக்க 25 ஏக்கரில் பசு மடம் அமைக்கும் விவகாரம், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை என அனைத்தும் சர்ச்சையில் முடிந்தது. இதற்கு தோழமை கட்சிகள் ஒரு சிலர் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மே 17 இயக்கம்

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கம் சார்பாக அனுமதி கோரியிருந்தனர். இதற்கு அரசு சார்பில் எந்த ஒரு விளக்கமும் தராத நிலையில் சில கட்சினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி சீமான், ‘2009ம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை ஆனது உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவுகூறும் நாள். இதன் பொருட்டு மே 17 இயக்கம் கோரிய மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

விடுதலை சிறுத்தை

விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன், ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவை மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுகொள்ள மே 17 இயக்கத்திற்கு அனுமதி தர வேண்டும். இது ஓர் இனக்கருவறுப்புக் கொடூரத்தை கண்டிக்கும் அறப்போராகும். எனவே தமிழக அரசு நினைவேந்தல் நிகழ்விற்கு அனுமதி தர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தற்போது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


அண்மை காலமாக ஒரு தமிழர்களுக்கான கட்சி திமுக என்று விளம்பரம் செய்துகொள்ளும் திமுக அரசு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மெரினாவில் இடம் அனுமதிக்குமா? என எதிர்கட்சினரும் பொதுமக்களும் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Related posts