தஞ்சாவூரில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று சுமார் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1,458 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் முனிசிபல் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
ஊரடங்கு தேவையா ?
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் இதுவரை 94.68% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 85.47% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். மேலும், தமிழக அரசு தடுப்பூசி போடும் பணிகளை ஒரு இயக்கமாக முன்னெடுத்ததால் தான் தற்போது தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலைப்படி தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையில் 5% பாதிப்பு உள்ளது இதனால் தமிழகத்தில் ஊரடங்கு தேவையில்லை’ என்று மா.சுப்பிரமணியம் கூறினார்.

