ஆன்மீகம்

பொய்கை ஆழ்வாரின் பக்தி – சிறு பார்வை

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பகுதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.

எழில் கொஞ்சும் அந்த தாமரை பொய்கையின் நடுவே மடலவிழ்ந்த ஒரு மனோகரத் தாமரையில் ஸ்ரீமந்நாராயணன் திருக்கண் மலர்ந்தார். அப்பெருமானின் திருக்கரங்களில் சுடர் வீசும் பாஞ்சஸந்யம் எனப்படும் திருச்சங்கின் அம்சமாக தெய்வக் குழந்தையாக அவதரித்தார்.

ஸித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் வளர்பிறையாம் அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை திருவோண நட்த்திரத்தில் அவதரித்த இந்த தெய்வ குழந்தையின் அதிமதுரக்குரல் கேட்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இன்னிசை பண்ணிசைத்து மகிழ்ந்தனர். பொய்கையில் பிறந்ததால் பொய்கையார் என்று திருநாமம் சூட்டினர். திருமாலின் சேனைத்தலைவன் திருமாலை வழிபடுவதற்குரிய திருவெட்டெழுத்தை முறையோடு அக்குழந்தையின் காதில் ஓதினார்.

பிறப்பிலேயே திருவெலாம் பெற்று வந்த பொய்கையார் கோகுலத்தில் கண்ணன் வளர்ந்தது போல திருவெஃகாவில் வளர்ந்து வந்தார். நடைபயிலும் பருவத்திலேயே அருந்தமிழ் கலையும் வேதபுராணங்களும் கற்றுணர்ந்தார். இருமைக்கும் துணை புரிவது திருமாலுக்குச் செய்யும் திருத்தொண்டு ஒன்றேயாகும் என்பதை நிலையாக நெஞ்சில் பதித்துக் கொண்டார். அல்லும் பகலும் திருமாலின் அடிமலர் புகழ்ப் பாடிவரும் ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் இவரை பொய்கை ஆழ்வார் என்றே போற்றி பணிந்தனர். பொய்கை ஆழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து பரமனையே கண்டது போல பெருமிதம் அடைந்தனர்.

காஞ்சியில் 18 வைஷ்ணவ ஷேத்திரங்களிலும் மங்களாஸாஸனம் செய்து எம்பெருமானை போற்றினார் பொய்கை ஆழ்வார். அதன் பின்னர் பொய்கை ஆழ்வார் தொண்டை மண்டலத்திலுள்ள திவ்ய ஷேத்திரங்களை தரிசிக்க திருவுள்ளம் கொண்டு பாதயாத்திரை புறப்பட்டார். பற்பல ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே திருக்கோவிலூரை அடைந்தார். அக்கோவிலில் உள்ள உலகளந்த பெருமானை தரிசிக்க திருவுள்ளம் கொண்டார். இவர் முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

Related posts