திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், உண்டியல் வருவாயும் வெகுவாக அதிகரித்துள்ளது.
உண்டியல் வருவாய்
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதன்படி கோவிலின் உண்டியல் வருவாய் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் ரூ.128 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் ரூ.127.5 கோடி ரூபாயும், மே மாதத்தில் ரூ.129.93 கோடி ரூபாயும, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி ரூபாயும், ஜூலை மாதம் இதுவரை ரூ.106 கோடி ரூபாய் உண்டியல் சேர்ந்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு முடிவுக்குள் உண்டியல் வருவாய் ரூ.1500 கோடி ரூபாயை எட்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இது போக தங்கம், வெள்ளி, வைரம் தனியாக கிலோ கணக்கில் சேர்ந்துள்ளது. திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 80,000 பக்தர்கள் தரிசிக்கின்றனர். 31,562 பேர் முடி காணிக்கை செலுத்துகின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.4.82 கோடி ரூபாய் உண்டியல் வசூலாகின்றது.

