சமத்துவ நாளில் பாஜக – விசிக மோதல்!
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜக – விசிக கட்சினர் இடையே சென்னை கோயம்பேட்டில் மோதல் ஏற்பட்டது.
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஒற்றை நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய மாபெரும் மனிதர்.
1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மாவ் கிராமத்தில், ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார் அம்பேத்கர். சிறு வயதில் இருந்தே ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர். கல்வி தான் தனக்கான ஆயுதம் என்று முடிவு செய்தார். குடும்ப சூழல், வறுமை என்று எந்த தடைகள் வந்தாலும் கல்வி கற்பதில் உறுதியாக இருந்தார். தனது இளங்கலைப் பட்டத்தை 1912ம் ஆண்டு பெற்றார். 1913ம் ஆண்டு அமெரிக்கா சென்று முதுகலை பட்டத்தை முடித்தார். பிறகு, லண்டனில் தன்னுடைய மேற்படிப்பை தொடர விரும்பினார். சில சூழ்நிலைகளால், அம்பேத்கர் தனது படிப்பை தொடரமுடியாமல் இந்தியா திரும்பினார். 1920 ம் ஆண்டு மீண்டும் லண்டன் சென்ற அம்பேத்கர் தன் கடுமையான முயற்சியால் 1923ம் ஆண்டு இங்கிலாந்த் அரசாங்கம் வழங்கும் பாரிஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.
அதன்பிறகு, இந்தியா வந்த அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார். இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் அதை சிறப்பாக செய்து முடித்தார். அவர் கொண்டுவந்த அரசியல் அமைப்புதான் இன்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
சமத்துவ நாள்
இந்திய அரசியலமைப்பை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுக்க உழைத்த அண்ணல் அம்பேத்கரை கௌரவப்படுத்தும் விதமாக, அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி தமிழகத்தில் சமத்துவ நாளாக கொண்டாப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாஜக – விசிக மோதல்
இதைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 14) அம்பேத்கரின் பிறந்த நாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்பட்டது. அனைத்து கட்சினரும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு கைகலப்பானது. இதில் விசிகவினர் இருவருக்கும் , பாஜகவில் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இரு கட்சினரும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோயம்பேடு சாலையில் சில மணிநேரம் பதற்றம் நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் இதே பிரச்சனை இதே இரு கட்சிகள் இடையே எழுந்துள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பாஜகவினருக்கும் விசிகவிற்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மயிலாடுதுறையில் ஐந்து நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.