இசைஞானி இளையராஜாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதை அரசியலாக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நியமன எம்பிக்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமன செய்யப்பட்டவர். அந்த 12 நபர்களும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு மாநிலங்களவையில் நியமன எம்பி பதவி வழங்குவது வழக்கம். அப்படி தான் இம்முறையும் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், இசைஞானி இளையராஜா ஆகியவர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவையின் நியமன எம்பியாக அறிவித்துள்ளார்.

அரசியலாக்க வேண்டாம்
இசைஞானி இளையராஜாவிற்கு எம்பி பதவி வழங்கப்பட்டதற்கு பல அரசியல் பிரமுகர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்தனர். மறுபுறம் பல்வேறு தரப்பினர் இதுகுறித்து விமசனங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இசைஞானி இளையராஜாவிற்கு எம்பி பதவி வழங்கியதை அரசியலாக பார்க்க வேண்டாம். இது அவரின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. மேலும், அம்பேத்கர் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட புத்தகத்தின் முன்னுரையில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா எழுதியது அவரின் தனிப்பட்ட விஷயம். இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை மட்டும் பாராட்டவில்லை. தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியுள்ளார்.

இது அவரத்தின் திறமைக்கு கிடைத்த கௌவரம். எனவே இதை அரசியலாக்க வேண்டாம். இசைஞானி இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
