காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரு தினங்களாக மேற்கு தொடர்ச்சிமலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று பெய்த கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், ‘இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

