தமிழ்நாடு

சிசிடிவியில் சிக்கிய தக்காளி திருடன்!

சேலம் மாவட்டத்தில் சாதாரணமாக நின்றுகொண்டிருந்த நபர் திடீரென அருகில் இருந்த தக்காளி பெட்டியை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தக்காளி விலை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை சற்று உயர்ந்தே காணப்படுகிறது. தக்காளி வரத்து குறைவால் தமிழக மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.

தக்காளி பெட்டி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் காய்கறி கடை ஒன்று உள்ளது. நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே சாலையை ஒட்டியபடி கடை அமைந்திருப்பதால் நள்ளிரவில் வரும் காய்கறி லோடுகள் வாசலிலேயே இறக்கப்படும். இதேபோல், கடந்த வாரம் கடைக்கு நள்ளிரவில் லோடு வந்துள்ளது. மொத்த சரக்கையும் இறக்கி வைத்துவிட்டு, அதனுடன் மூன்று  தக்காளி பெட்டியையும் இறக்கி வைத்துவிட்டு வியாபாரி சென்றுள்ளார்.

tomato theft

தக்காளி கடத்தல்

மறுநாள் காலையில் வந்து பார்க்கையில் மூன்றில் இரண்டு பெட்டி  தக்காளி மட்டுமே இருந்திருக்கின்றது. ஒரு பெட்டி தக்காளி காணாமல் போனதை கண்டு வியாபாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே கடை வாசலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வியாபாரி ஆய்வு செய்து பார்த்துள்ளார். அதில், விடியற்காலையில் நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கடை முன் நின்று கொண்டிருக்கிறார். பின்னர், அங்கும் இங்கும் நோட்டமிட்டுள்ளார். கடையில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் சட்டென ஒரு தக்காளி பெட்டியை திருடி தனது இருசக்கர வாகனத்தில் வைத்து ராக்கெட் வேகத்தில் பறந்தார்.

சிக்கிய திருடன்

வியாபாரி கொடுத்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளை வைத்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள தொடங்கினர். சிசிடிவி கேமராவில் பதிவான வண்டி பதிவு எண்ணை வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் வெண்ணாந்ததூர் பகுதியை சேர்ந்த 32 வயதான சின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

apple

ஆப்பிள் திருடன்

மேற்கொண்டு, போலீசார் நடத்திய விசாரணையில், இவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ஆப்பிள்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர்தான் தக்காளி பெட்டியை திருடியவர் என்பதும் தெரியவந்தது. வீடுபுகுந்து திருடுவது சிரமமாக இருப்பதால், இவ்வாறான நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பதாக திருடன் சின்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆப்பிள் திருட்டு வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த நபரை தற்போது தக்காளி திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.