மதுரவாயலில் கப்பல் என்ஜினியரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் டில்லிபாபு (29). இவர் கப்பல் துறையில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (38) என்பவர், டில்லிபாபுவிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து டில்லிபாபு, கோகுலிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் டில்லிபாபுவை கொலை செய்ய கோகுல கிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கோகுலகிருஷ்ணன் அவரது நண்பர்களான கார்மேகம் (38), பூபாலன் (32), ராஜ்குமார் (33), சுந்தர் (32) ஆகியோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த டில்லிபாபுவை அவரது வீட்டின் அருகே வைத்து மேற்குறிப்பிட்ட 5 சேர்ந்து கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் திருவண்ணாமலைக்கு டில்லிபாபுவை கொண்டு சென்ற அவர்கள், அங்கு அவரை வெட்டிக்கொலை செய்து உடலை எரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டில்லிபாபுவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் டில்லிபாபு பயன்படுத்திய காரை, திருவண்ணாமலை அருகே விற்பனை செய்வதற்காக தென்னந்தோப்பில் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோகுலும், அவரது நண்பர்களும் டில்லிபாபுவை கடத்திச் சென்று கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கார்மேகம், பூபாலன், ராஜ்குமார், சுந்தர் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விஜயகுமார் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் கோகுல் (என்ற) கோகுல் கிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

