ஆன்மீகம்

பஞ்சபூத தலங்களில் வாயு தலம் – திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் கோயில்

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காளத்தி – காளஹஸ்தீஸ்வரர் கோயில் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலமாகும். பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும்.

ஸ்ரீ – காளம் – அத்தி -சிலந்தி – பாம்பு – யானை – ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். மலையடிவாரத்தில் உள்ள அருமையான திருக்கோயில்.

வரலாறு

பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன.

இக்கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான்.

12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கிபி 1516 ல் விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள்.

துளி அளவிலும் காற்று புகாத கர்ப்பக்கிரகத்தில் ஏற்றப்படும் தீபம் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகள் கூற்று.

 

 

 

Related posts